“இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!” رَّبِّ زِدْنِي عِلْمً -அல் குர்ஆன் : 20 -114
கல்வி கற்றவர்களாக இருங்கள் ; கற்றுக்கொடுப்பவர்களாக இருங்கள்;
கற்பவர்களுக்கும் கற்றுக்கொடுப்பவர்களுக்கும் உதவி செய்பவர்களாக இருங்கள் - நபி மொழி

Sunday, February 6, 2011

ஏப்ரலில் "ஸ்லெட்' தேர்வு

சென்னை, டிச. 28: கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு மாநில அளவில் நடத்தப்படும் தகுதித் தேர்வான "ஸ்லெட்' தேர்வை ஏப்ரலில் நடத்த பாரதியார் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு இந்தத் தகுதித் தேர்வை நடத்த பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான தகுதித் தேர்வாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பில் "தேசிய தகுதித் தேர்வு' (நெட்) நடத்தப்படுகிறது.

இதுபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தின் சார்பில் "ஸ்லெட்' என்ற மாநில அளவிலான தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. "நெட்' தேர்வு ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படும். "ஸ்லெட்' தேர்வு மாநில அரசின் அனுமதியுடன், யுஜிசி ஒப்புதல் பெற்று நடத்தப்படும். தமிழகத்தில் சில ஆண்டுகளாக கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான குறைந்தபட்ச தகுதியாக முதுகலை பட்டப்படிப்பு, அது தொடர்பான பாடத்தில் எம்.ஃபில். பட்டமும் பெற்றிருந்தால் போதும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் விரிவுரையாளர் பணிக்கு முதுகலை பட்டப் படிப்புடன் "நெட்' அல்லது "ஸ்லெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் என்றும், பி.எச்டி. முடித்தவர்களுக்கு மட்டும் இந்தத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்றும் மத்திய அரசு 11.7.2009-ல் வழிகாட்டு நெறிமுறை வகுத்தது. யுஜிசி-யும் இந்த புதிய நெறிமுறையைப் பின்பற்றி 30-6-2010 அன்று கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான புதிய விதிமுறையை வெளியிட்டது. ஆனால், 12-8-2010 அன்று விரிவுரையாளர் பணிக்கு நெட் அல்லது ஸ்லெட் தகுதி இல்லாத எம்.ஃபில். பட்டதாரிகளையும் நியமிக்க வகை செய்யும் வகையில் யுஜிசி தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதன் மூலம் தகுதித் தேர்வு கட்டாயம் என்ற நிலை உருவாகியுள்ளது. பிஎச்டி பட்டம் முடிக்க குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் ஆகும் என்பதால், விரிவுரையாளராக நினைக்கும் முதுகலை பட்டதாரிகள் அனைவரும் தகுதித் தேர்வை எதிர்பார்த்து உள்ளனர். "நெட்' தேர்வைக் காட்டிலும் எளிதாக இருக்கும் என்பதால், இவர்களில் பெரும்பாலானோர் "ஸ்லெட்' தேர்வை எதிர்நோக்கியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக "ஸ்லெட்' தேர்வு நடத்தப்படாததால், முதுகலை பட்டதாரிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். அண்மையில், தமிழக அரசு அனுமதி அளித்தும், யுஜிசி ஒப்புதல் கிடைக்காததால் தகுதித் தேர்வை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது என பாரதியார் பல்கலைக்கழகம் தெரிவித்தது. இந்த நிலையில் தமிழகத்தில் "ஸ்லெட்' தகுதித் தேர்வை நடத்த யுஜிசி இப்போது ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் சி. சுவாமிநாதன் கூறியது: "ஸ்லெட்' தேர்வை நடத்த ஒப்புதல் பெறுவதற்காக பல்கலைக்கழக அதிகாரிகள் யுஜிசி அதிகாரிகளை தொலைபேசி மூலம் தொடர்ந்து தொடர்பு கொண்டு வந்தனர். இதன் மூலம் தேர்வை நடத்த யுஜிசி ஒப்புதல் அளித்துள்ளது. எழுத்துப்பூர்வமான ஒப்புதல் இந்த வார இறுதியில் கிடைத்து விடும்.
பல்கலைக்கழக முதுகலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வுகள் பிப்ரவரியில் தொடங்கி மார்ச் வரை நடைபெறும். எனவே, "ஸ்லெட்' தேர்வை மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கான அறிவிப்பு பல்கலைக்கழக இணைய தளத்திலும், பத்திரிகைகளிலும் வெளியிடப்படும். தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு "ஸ்லெட்' தேர்வை நடத்த பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது என்றார்.

Courtesy : Dinamani

Miniature of petroleum Rig(Offshore)

சமச்சீர் கல்வித் திட்டத்தில் சிறுபான்மை மொழிப் பாடங்கள்: முதல்வர் கருணாநிதி

சென்னை, டிச. 15: சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ், சிறுபான்மை மொழிப் பாடங்கள் கொண்டு வரப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

மேலும், மதிப்பெண் சான்றிதழ்களில் சிறுபான்மை மொழிப் பாடங்களின் மதிப்பெண்களும் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் சமச்சீர் கல்வித் திட்டத் திட்டம் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளில் நடப்பு ஆண்டில் அமலில் உள்ளது. அடுத்த கல்வியாண்டு முதல் அனைத்து வகுப்புகளிலும் சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வரப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், சிறுபான்மை மொழிப் பாடங்கள் கொண்டு வரப்படும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் முதல்வர் கருணாநிதி அறிவித்து இருந்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையிலான உத்தரவை செவ்வாய்க்கிழமை அவர் பிறப்பித்துள்ளார்.

சிறுபான்மை மொழிப் பாடங்களின் மதிப்பெண்கள், தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை வழங்கும் மதிப்பெண் சான்றிகழ்களில் இடம்பெறாது. ஆனால், இப்போது அதைச் சேர்க்கவும் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்தி:

பள்ளிகளில் இப்போதுள்ள உருது, கன்னடம், மலையாளம், தெலுங்கு, அரபிக் போன்ற சிறுபான்மை மொழிகளையும் கற்பித்திட வாரத்துக்கு நான்கு பாட வேளைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

மொழிப் பாடங்கள் மற்றும் சிறுபான்மை மொழி வழியில் கற்பிக்கப்படும் பாடங்களுக்கான பாடநூல்கள் தயாரிக்கப்படும். மேலும், சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான தேர்வுகளும், அவற்றின் மதிப்பெண்கள் பட்டியலிலும் இடம்பெறும் என முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

Courtesy: Dinamani

Pupils assembly




Pupils assembly - 2


வேலை தேடுவோர் கவனிக்க வேண்டியவை...

சவாலே சமாளி

வேலைதேடும் புதிய பட்டதாரிகளிடம் தொழில் நிறுவனங்கள் என்ன எதிர்பார்க்கின்றன? எத்தகைய தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்?...என்பது குறித்து வேலைதேடும் இளைஞர்களுக்கு சுரேகா கோத்தாரி கூறும் யோசனைகள் :


மாறிவரும் பொருளாதாரச் சூழ்நிலையில் எத்தகைய பணியில் சேருவது என்பது குறித்து இளைஞர்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டும். பல சமயங்களில் ஒரு பணியில் சேர்ந்த பிறகு அதுகுறித்து மறுபரிசீலனை செய்யும் நிலைக்குப் பல இளைஞர்கள் ஆளாகிறார்கள்.

திறனறிவு (APTITUDE), விருப்பம், அர்ப்பணிப்பு உணர்வு போன்றவற்றின் அடிப்படையில் எத்தகைய பணியில் சேருவது என்று தொடக்கத்திலேயே முடிவு செய்வதில்லை. பெற்றோர்களின் விருப்பத்திற்கேற்ப, கவர்ச்சிகரமானது என்று அவர்களால் கருதப்படும் பணிகளில் சேரும்போது இதுபோன்ற நிலை ஏற்படுகிறது.


ஒவ்வொரு துறையும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக மாறி வருகிறது. இன்றைக்கு உள்ள நோக்கும் தொழில்நுட்பமும் சில ஆண்டுகளிலேயே காலாவதியாகிவிடும். அதனால் காலத்தின் தேவைக்கேற்ப தங்களைத் தொடர்ந்து தரம் உயர்த்திக் கொள்ளாதவர்கள், நடு வாழ்க்கையில் பணிகளில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். இல்லாவிட்டால் ஸ்தம்பித்துப் போய்விட நேரிடும்.

இன்றைய உலகில் பொருள்கள் சர்வதேசத் தரத்தில் இருக்க வேண்டும். எனவே, தனிப்பட்ட பணியும் ஒரு பொருளைப் போல சர்வதேசத் தரத்தில் இருக்க வேண்டும்.


இன்றைய சூழ்நிலையில் எத்தகைய தரத்தில் கல்வி பெறுகிறோம் என்பதுடன் தலைமைப் பண்பு, குழுவுடன் இணைந்து செயல்படுதல் போன்ற ஆளுமைப் பண்புகளையும் பெற்றிருக்க வேண்டும். திறமையான செயல்பாடு முக்கியம். வெற்றிக்கு குறுக்கு வழிகள் எதுவும் கிடையாது. பணியில் அர்ப்பணிப்பு உணர்வு, கடுமையாக உழைக்கும் திறன், நம்பகத்தன்மை ஆகியவற்றின் மூலம்தான் வெற்றியை ஈட்ட முடியும்.


ஊழியர்கள் சிறப்பாக உழைப்பதையே வேலை வழங்குபவர்கள் விரும்புகிறார்கள். விருப்பப் பணி ஓய்வோ அல்லது கட்டாயப் பணி ஓய்வோ இன்றைய நடப்புகளாகிவிட்டன. எனவே, இளம் பருவப் பணிக்காலத்திலேயே அதிக அளவில் சேமிக்க வேண்டியது குறித்து இளைய தலைமுறையினர் சிந்திக்க வேண்டும். வயது வளர வளர, செயல்பாட்டையும் திறமையையும் தொடர்ந்து உயர்நிலையில் தக்க வைத்துக்கொள்வதற்கான வழிமுறைகளைக் காண வேண்டும்.


இந்தியாவில், சமூகத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம். புதிய பொருளாதாரக் கொள்கை குறித்துக் கூக்குரல் எழுப்பப்படுகிறது. அதைவிட, பழைய பொருளாதார முறையில் இன்றைக்கும் நிறையப் பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும். உலகளாவிய அளவில் போட்டி போட வேண்டிய சூழ்நிலையில் கடும் நெருக்கடி ஏற்படுகிறது.


பெருமளவு வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு இடம் அளிக்கும் வகையில் பழைய பொருளாதாரத்தை அரசு தாராளமயமாக்க வேண்டியுள்ளது. வீட்டுக் கடன்களுக்கு வரிச் சலுகை அளித்ததன் மூலம் கட்டடத் தொழிலுக்கு நல்ல பலன்கள் கிடைத்துள்ளது.

திறமை, திறனறிவு, சிறப்புச்சாதனைக்கான ஊக்கம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இன்றையப் பணி அமைகிறது. தொழிலுக்குத் தேவையான படிப்பைப் பெறுவதன் மூலம் மட்டுமே வெற்றிகரமான பணிக்கு உத்தரவாதமாக இருக்காது.


உலகளாவிய அரசியல் பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக, குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் பணிக்குச் செல்வதற்குச் சாதகமான சூழ்நிலை இருக்காது.

சேவைத்துறைகள் நிறுவனமயமாக்கப்பட்டு, பல்வேறு நிலைகளில் தொழில்திறன்மயமாக்கப்படும் சூழ்நிலையில், நாட்டில் சிறு தொழில்முனைவோர் என்பது கெட்டகனவாகி வருகிறது. எனவே, பெரிய நிறுவனங்களில் அனுபவம் பெற்ற பின்னர் தொழில் முனைவோராவது நல்லது.


வெற்றி என்பது ஒரு நாள் கனவு நிறைவேறுவதுடன் முடிந்து விடுவதல்ல. வாழ்க்கை என்பது சவால். துணிச்சலாகச் சிந்திக்க வேண்டும். "க்ரியேட்டிவ்வாக' இருக்க வேண்டும். இப்போதையச் செயல்பாடுகள் முந்தையச் செயல்பாடுகளைவிட மேம்பட்டு இருக்க வேண்டும். கற்பது என்பது முடிவற்றதாக இருக்க வேண்டும். இப்படி இருந்தால் தான் வெற்றியாளராக இருக்க முடியும். சரியான அணுகுமுறையும் விடாப்பிடியான உணர்வும் இதற்குத் தேவை.

Thanx: Dinamani Dt 06-Feb-11