அம்பேத்கர் விருதை இந்த ஆண்டு தோழர் என்.வி-க்கு அறிவித்து இருந்தார் தொல். திருமாவளவன். வரும் 16-ம் தேதி இந்த விருது கொடுக்கப்படுவதாக இருந்தது. இதற்காக ஒரு பாராட்டு விழா நடத்த மார்க்சிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நகர் கமிட்டி சார்பில் ஏற்பாடுகளும் பரபரப்பாக நடந்தன. ஆனால், விருது பெறாமலேயே கடந்த 10-ம் தேதி சென்னையில் மரணம் அடைந்துவிட்டார், என்.வி. என்று தோழர்களால் அன்போடு அழைக்கப்படும் என்.வரதராஜன்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே கம்பிளியப்பட்டியில் 1925-ம் ஆண்டு பிறந்தவர் என்.வரதராஜன். எட்டாம் வகுப்பு வரை படித்தவர், பஞ்சாலை தொழிலாளர்களின் உரிமைக்காக சங்கம் அமைத்துப் போராடினார். 1943-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஆனார். 1964-ம் ஆண்டு ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சில் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து, தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய முக்கிய சிலரில் என்.வி-யும் ஒருவர். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும், மூன்று முறை கட்சியின் மாநிலச் செயலாளராகவும் பணியாற்றி உள்ளார்.
சென்னையில் உள்ள கட்சியின் மாநிலக் குழு அலுவலகத்தில், பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது உடல், இறுதி நிகழ்ச்சிக்காக திண்டுக்கல்லுக்குக் கொண்டுசெல்லப்பட்டது. தோழரின் உடல் அருகே கண்ணீரோடு அமர்ந்து இருந்த திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, வரதராஜனைப் பற்றிய சில நினைவு களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்...
''தோழர்களுக்குப் பொறுமையும் சகிப்புத் தன்மையும் ரொம்ப முக்கியம் என்று அடிக்கடி சொல்வார். அவர் கட்சியோட மாநிலத் தலை வராக இருந்தாலும், எந்த ஊருக்குப் போனாலும் விடுதியில் தங்க மாட்டார். கட்சி அலுவலகத்தில் துண்டை விரிச்சுத்தான் தூங்குவார். வெறும் 40 பேர் இருக்கிற கூட்டம் என்றாலும் நிறைவாப் பேசுவார். 'கூட்டம் குறைவா இருக்குன்னு பார்க்கக் கூடாதும்மா. இந்த 40 பேரை சேர்க்க தோழர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாங்கன்னுதான் பார்க்கணும்’னு சொல்வார்.
மூன்று முறை சட்டமன்ற உறுப்பினரா இருந்தும், அவருக்குச் சொந்தமா ஒரு வீடுகூட இல்லை. அம்மா (என்.வி-யின் மனைவி ஜெகதாம் பாள்) அவரிடம் ஒரு முறை, 'இப்படி வீடுகூட இல்லாம இருக்கோமே... நான் இறந்தா எங்க புதைப்பீங்க?’னு கேட்டப்ப, 'என் மடியில்தான் உன் உயிர் போகும். தோழர்கள் உன்னைப் புதைப் பாங்க’ன்னு சொன்னார். தன்னோட ரெண்டு பசங்களுக்கும் அரசாங்க வேலை வாங்கிக் கொடுக்காத தலைவர் அவர். எந்த சிபாரிசுக்கும் போகாதவர்'' என்றார் கண்ணீருடன்!
தனக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றாத என்.வி-யை நினைத்து கண்ணீரும் கம்பலையுமாக நிற்கும் ஜெகதாம்பாளுக்கு, தோழர்கள் தங்களது ஆதரவால் அஞ்சலி செலுத்தி நிற்கிறார்கள்.