“இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!” رَّبِّ زِدْنِي عِلْمً -அல் குர்ஆன் : 20 -114
கல்வி கற்றவர்களாக இருங்கள் ; கற்றுக்கொடுப்பவர்களாக இருங்கள்;
கற்பவர்களுக்கும் கற்றுக்கொடுப்பவர்களுக்கும் உதவி செய்பவர்களாக இருங்கள் - நபி மொழி

Thursday, March 3, 2011

CONFIDENCE TRIUMPS

காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளியின் கழிப்பிட சுவர் இடிந்து விழுந்து, பொதுத் தேர்வு மாணவியர் இருவர் காயமடைந்தனர்; மனம் தளராத மாணவி ஒருவர், "ஸ்ட்ரெட்சரில்' படுத்தவாறு தேர்வெழுதினார்.
 
பிளஸ் 2 பொதுத் தேர்வு, தமிழகம் முழுவதும் நேற்று துவங்கியது. திருப்பூர் மாவட்டம், காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுத, இப்பள்ளி மற்றும் கார்மல் மகளிர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் வந்தனர்.இந்நிலையில், கழிப்பிடத்துக்கு சென்ற மாணவியர் பலர், சுவர் மீது சாய்ந்து நின்றதால், எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து விழுந்தது. இதில் காயமடைந்த, சிவன்மலை வடக்கு வீதியைச் சேர்ந்த விஜயகுமார் மகள் யோகாம்பிகை, காங்கயம் அய்யாசாமி காலனியைச் சேர்ந்த கோவிந்தசாமி மகள் ஹேமலதா, காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தேர்வு எழுத வந்தனர்.மாணவி யோகாம்பிகை,அமர்ந்த நிலையில் தேர்வெழுத முடியாமல் சிரமப்பட்டதால்,பள்ளி ஆசிரியர் ஒருவர் மூலம் எழுத அனுமதிக்கப்பட்டார். ஆனால், மாணவியே தேர்வெழுத முன் வந்ததால், "ஸ்ட்ரெட்சரில்' படுத்தவாறு எழுதினார். காயமடைந்த மாணவியருக்காக, ஒரு மணி நேரம் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது.

இரண்டு கைகளும் இல்லாத மாணவி கால்களால் பிளஸ் 2 தேர்வு எழுதி சாதனை : பிறவியிலேயே இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்த, மாற்றுத் திறனுடைய மாணவி வித்யஸ்ரீ(17). இவர், விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த ஆற்காடு கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலையின் மூத்த மகள். "கைகள் இல்லை என்றால் என்ன? எழுதுவதற்கு கால்கள் உள்ளன. படித்து மற்றவர்களைப் போல் என்னாலும் வாழமுடியும்' என்பதை, வாயால் சொல்லாமல், செயலில் நிரூபித்து காட்டி வருகிறார்.

கடந்த 2009ல், 10ம் வகுப்பு தேர்வில், காலால் தேர்வு எழுதி, 329 மதிப்பெண்கள் பெற்ற இவர், திருக்கோவிலூர் சைலோம் டி.எம்., பெண்கள் விடுதி மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். இவருக்கு உதவியாக, 9ம் வகுப்பில், இவர் தங்கை அனிதாவும், இதே பள்ளியில் படித்து வருகிறார்.தற்போது பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் வித்யஸ்ரீ, நேற்று, இதே பள்ளியில், சக மாணவியருடன் தரையில் அமர்ந்து, மூன்று மணி நேரத்திற்குள் தேர்வை எழுதினார்.அரசு அவருக்கு, கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கியபோதும், மூன்று மணி நேரத்திலேயே தேர்வை எழுதி முடித்தார். தேர்வை எழுதி முடித்து விட்டு வந்த வித்யஸ்ரீ, "ஆயிரத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்று, தேர்ச்சி பெறுவேன்' என, உற்சாகத்துடன் கூறினார்.

வலது கையை இழந்த மாணவர் இடது கையால் தேர்வு எழுதி அசத்தல் : விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வுகள் நேற்று துவங்கியது. தனித்தேர்வர்கள் உள்ளிட்ட 32 ஆயிரம் பேர் தேர்வில் பங்கேற்று தமிழ் முதல் தாள் தேர்வெழுதினர். தேர்வு மையங்களில் மாற்றுத் திறன் படைத்த மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், அவர்களுக்கு உதவும் விதமாக கூடுதல் நேரம் ஒதுக்கி தேர்வுத் துறை அனுமதி வழங்கியுள்ளது. இதன் பேரில் மாற்றுத் திறன் படைத்த மாணவ, மாணவிகள் முன் கூட்டியே தேர்வுக்கான கூடுதல் அவகாசம் வழங்க கோரி தேர்வுத் துறைக்கு மனு கொடுத்திருந்தனர். அவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அவகாசம் கொடுத்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

வலது கையை இழந்த மாணவர் இடது கையால் தேர்வு எழுதி அசத்தல்:விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் மான்போர்ட் பள்ளி, பிலோமினாள் பள்ளி, கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளி, வளவனூர் அரசு ஆண்கள் பள்ளி, திருக்கோவிலூர் வித்யாமந்திர் பள்ளி, செஞ்சி அரசு மகளிர் பள்ளி ஆகியவற்றில் தலா ஒரு மாற்றுத் திறன் படைத்த மாணவரும், திருக்கோவிலூர் டி.எம்.மகளிர் பள்ளி, உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் பள்ளியில் தலா மூன்று மாணவர்களும், தியாகதுருகம் அரசு ஆண்கள் பள்ளி, மவுன்ட் பார்க் பள்ளிகளில் தலா இரண்டு மாணவர்களும் என 16 மாற்றுத் திறன் படைத்த மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அவகாசம் கொடுக்கப்பட்டு தேர்வெழுதினர்.

விழுப்புரம் அடுத்த வளவனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மணிகண்டன் என்ற மாற்றுத் திறன் படைத்த மாணவர் தேர்வெழுதினார். பட்டாசு வெடி விபத்தில் தனது வலது கையை இழந்த அந்த மாணவன் இடது கையால் தன்னம்பிக்கையுடன் தேர்வெழுதினார். வளவனூர் அருகே உள்ள செங்காடு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான அய்யனார் மகன் மணிகண்டன், தான் 5ம் வகுப்பு படித்தபோது பட்டாசு தயாரிக்கும் பணிக்கு பகுதிநேரமாக சென்று பணியாற்றியுள்ளார். அப்போது ஏற்பட்ட விபத்தில் அவரது வலது கை துண்டிக்கப்பட்டுள்ளது. கை இழந்த நிலையிலேயே அவர் பத்தாம் வகுப்புபொதுத் தேர்வையும் சிறப்பாக எழுதியுள்ளார்.அப்போது எந்த உதவியையும் எதிர்பார்க்காத அவர், தற்போது பிளஸ் 2 பொதுத் தேர்வு தனது உயர் கல்வி வாழ்க்கையை நிர்ணயிக்கும் என்பதால் மாற்றுத் திறனாளிக்கான கூடுதல் அவகாசம் கேட்டு அனுமதி பெற்றுள்ளதாக தெரிவித்தார். அவரது தன்னம்பிக்கைக்கு ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.